ஷா ஆலம், நவ 11- ஒற்றுமையை வழிகாட்டிக் கோட்பாடாகக் கொண்டு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்கம் காண்பதற்கு சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.
வலுவான பொருளாதார உள்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த சமூக கட்டமைப்பின் வழி ஆசியானின் கூட்டமைப்பை நோக்கி தனது பொருளாதார கவனத்தை திருப்பும் தனித்துவமிக்க நிலையில் மாநில அரசு உள்ளது என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனத் தெரிவித்தார்.
இந்த அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு ஒற்றுமை அடித்தளமாக இருக்க வேண்டும். உணர்வுகளுக்கோ வெறுப்புகளுக்கோ இங்கு இடமில்லை. வெறுப்புணர்வும் சூழ்ச்சிகளும் உள்நோக்கமும் இல்லாத உளப்பூர்வமான ஒற்றுமையின் மூலம் இதனை சாதிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இது சிலாங்கூர் மக்கள் விரும்பும் ஒற்றுமையை உள்ளடக்கியுள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் வெற்றியை உறுதி செய்யும் கூட்டு முயற்சி இதுவாகும் என அவர் மேலும் சொன்னார்.
உலகலாளவியல் அரசியலை சுட்டிக்காட்டிய அமிருடின், விரைவில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை, ஐரோப்பாவின் தீவிர வலது சாரி இயக்கங்களின் எழுச்சி, சீனாவின் பொருளாதார சிக்கல், ரஷியா மற்றும் உக்ரேன் இடையிலான போர் உள்ளிட்ட பிரச்சனைகள் புதிய கெடுபிடிப் போருக்கு அறிகுறியாக தென்படுகின்றன என்றார்.
உலகின் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படும் தென்கிழக்காசியாவின் வியூக முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.








