ஷா ஆலம், நவ 9 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர்
மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186
குடும்பங்களைச் சேர்ந்த 740 பேராக அதிகரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 11 துயர் துடைப்பு மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூறியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காகச்
சிப்பாங் மாவட்டதில் ஐந்து நிவாரண மையங்களும் கோல லங்காட்டில்
மூன்று மையங்களும் உலு லங்காட்டில் இரு மையங்களும் பெட்டாலிங்
மாவட்டதில் ஒரு மையமும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய பாதி பேர்
அதாவது 462 பேர் சிப்பாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அடுத்த
நிலையில் உலு லங்காட் மாவட்டத்தில் 114 பேரும் கோல லங்காட்டில்
109 பேரும் பெட்டாலிங்கில் 50 பேரும் நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிழக்கு பருவ மழை வரும் சனிக்கிழமை தொடங்கி அடுத்தாண்டு
மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய
வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி
அப்துல்லா கூறினார்.
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு உலர் உணவு
வகைகள், அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட உதவிப்
பொருள்கள் அடங்கிய 10,000 பொட்டலங்களை தயார் செய்துள்ளது.




