ஷா ஆலம், நவ 8 - பொய்ச் செய்திகள் மற்றும் 3ஆர் (மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள்) விவகாரம் தொடர்பில் இவவாண்டு நவம்பர் 1 வரை மொத்தம் 75 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாகத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணை அறிக்கைகளில் 45க்கு தீர்வு காணப்பட்டுள்ள வேளையில் 30 அறிக்கைகள் காவல்துறை, சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூட ஆணையத்தினால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்ற தியோ நீ சிங் கூறினார்.
இது தவிர, கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் பொய்ச் செய்திகள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சு தொடர்பில் மொத்தம் 3,752 உள்ளடக்கங்கள் 588வது சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் நீக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன உள்ளடக்கத்தை அகற்றும் நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களான டிக் டாக், முகநூல், இண்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்றவற்றுடன் இணைந்து எடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று சமூக ஊடக தளங்கள் மற்றும் பொது விவாதங்களில் 3ஆர் விவகாரத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சட்டம் குறித்து ஜெலி உறுப்பினர் டத்தோ வான் சைபுல்ருடின் வான் ஜானின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம், கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பொய்ச் செய்திகளை கண்காணிக்க கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சிறப்புப் பணிக்குழுவை அமைச்சு அமைத்ததாக நீ சிங் கூறினார்.




