ஷா ஆலம், நவ 8 - மலேசியாவிலுள்ள அனைத்து சிறார்களுக்கும்
இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையில்
கல்வியமைச்சு ஈடுபட்டு வருகிறது.
இந்நோக்கத்திற்காக 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில் திருத்தம்
செய்வதற்கு ஏதுவாக சட்ட வரைவை தாங்கள் தயாரித்து வருவதாக
கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
இந்த சட்டத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டால் தற்போது நடப்பிலுள்ள 6
ஆண்டுகள் கட்டாயக் கல்வி 11 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று
நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைத்து சிறார்களும் தங்கள் ஆற்றலை வளர்த்துக்
கொள்வதற்கு ஏதுவாக சமமான கல்வி வாய்ப்பை பெறுவதை உறுதி
செய்வது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த கட்டாயக்
கல்விக் காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்ட வரைவை செம்மைப்படுத்துவதற்காக இதர அமைச்சுகள்,
துறைகள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெறுவது
உள்ளிட்ட நடவடிக்கைகளை தமது அமைச்சு மேற்கொண்டு வருகிறது
என்றும் அவர் சொன்னார்.
அமைச்சரவை உள்பட முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள அனைத்து
தரப்பினரின் ஒப்புதலும் கிடைத்தப் பின்னர் இந்த மசோதா
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
மாணவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது ஆண்டுகள் கல்வி பயில்வதை
உறுதி செய்வதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சு
திட்டமிட்டுள்ளதா என்று பூச்சோங் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் இயோ
பீ யின் அவையில் கேள்வியெழுப்பியிருந்தார்.




