அலோர்ஸ்டார், நவ 8 - உள்நாட்டில் தவிடு உற்பத்தி செய்யும் நடவடிக்கை
கால்நடை வளர்ப்புத் துறையில் செலவினக் குறைப்புக்கு பெரிதும் துணை
புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சந்தைகளில் கோழியின்
விலை நிலைபெற்று பயனீட்டாளர்களின் சுமை குறையவும் வாய்ப்பு
ஏற்படும்.
கோழியின் பிரதான தீவனங்களாக விளங்கும் சோளம் மற்றும் சோயா
கடலை போன்றவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால்
கால் நடைத் தீவன விலையேற்றம் கோழி விலையில் கடுமையான
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வடமலேசிய பல்கலைக்கழக பொருளாதார
நிபுணர் நிறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஷஸிடா ஜான் முகமது கான்
கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன் 50 கிலோ தீவனத்தின் விலை 85.00
வெள்ளியாக இருந்தது. தற்போது இதன் விலை 135 வெள்ளியாக உயர்வு
கண்டு விட்டது. ரஷியா-உக்ரேன் போரும் இதற்கு ஒரு காரணமாக
விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
தீவன விலையேற்றம் தவிர்த்து மருந்துகள், பண்ணை பராமரிப்புக்கும்
கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இது தவிர தொழிலாளர்கள் பற்றாக்குறைப்
பிரச்சனையும் இந்த துறையில் அதிகம் காணப்படுகிறது என்றார் அவர்.
இந்த காரணங்களால் கோழியின் விலை உயர்வு காணும் என
பயனீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். இதன் அடிப்படையில் உள்நாட்டு
கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி தவிடு உற்பத்தியில் முழுமையான
கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தவிடு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவர்,
இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் தேவை என்றார்.




