புத்ராஜெயா, நவ 8: நவம்பர் 8 முதல் டிசம்பர் 7 வரையிலான காலக்கட்டத்தில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்தமான சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) தெரிவித்துள்ளது.
விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாபத் தடைச் சட்டம் 2011ன் கீழ் நிர்ணயித்தபடியே, ஒரு கிலோ பாட்டில் சமையல் எண்ணெயின் விலை RM6.90, 2 கிலோ RM13.30, 3 கிலோ RM19.60 மற்றும் 5 கிலோ RM30.90 ஆக உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் தெரிவித்தது.
"இது மக்களின் வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைக்கவும், விலைவாசி உயர்வுப் பிரச்சனையைச் சமாளிக்கவும் உதவுவதற்கு அரசாங்கத்தின் முயற்சியாகும். இது பொருட்களின் விலையில் ஏற்படும் நியாயமற்ற உயர்வுகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும்." என்று கே.பி.டி.என் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச விலைக்கு மேல் விற்கும் எந்த ஒரு தரப்பினரும் மீதும் விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆண்டிபிராஃபிடீரிங் சட்டம் 2011ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
"குற்றம் நிரூபிக்கப்பட்டால், தனிநபர்களுக்கு RM100,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம், அதே நேரத்தில் நிறுவனங்களுக்கு RM500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்" என்று அறிக்கை கூறுகிறது.
– பெர்னாமா




