உலு சிலாங்கூர், நவ 7- உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட
பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த
வசதி குறைந்த 750 குடும்பங்களுக்கு மாநில அரசின் இலவசத் தீபாவளி
பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு பத்தாங் காலி தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கு தலா 200
வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக உலு சிலாங்கூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சேவை மையத்தின் சார்பாக
இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறிய
அவர், பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் கடந்த 5ஆம் தேதி புக்கிட்
பெருந்தோங் லோட்டஸ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான
பொருள்களை வாங்கிக் கொண்டனர் என்றார்.
அதே தினத்தில் உலு பெர்ணம் தொகுதியைச் சேர்ந்த 350 பேருக்கும்
இலவச தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி பெஹ்ராங், டி.எஃப் மார்ட்
பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை
வாங்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்
அவர்.
தீபாவளியைக் கொண்டாடுவதில் பொருளாதார ரீதியில் சுமையை
எதிர்நோக்கியிருக்கும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த பெருநாள்
கால ஷாப்பிங் திட்டத்தை அமல்படுத்தி வரும் மாநில அரசுக்கு தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மாநில அரசு
இந்த பெருநாள் கால பற்றுச் சீட்டின் மதிப்பை 100 வெள்ளியிலிருந்து 200
வெள்ளியாக உயர்த்தியுள்ளது.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மாநிலத்திலுள்ள அனைத்து 56
நாடாளுமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த 22,000 வசதி குறைந்தவர்களுக்கு
பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 44 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில்
கூறியிருந்தார்.




