புத்ராஜெயா, நவ 7- அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் இந்த
வாரம் நடைபெறும் ஏபெக் எனப்படும் ஆசிய பிசிபிக் பொருளாதார
ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாகப்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என பலவேறு
தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்த போதிலும் அரச தந்திர, பொருளாதார
மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகளில் மலேசியாவின் நலனைக்
காப்பதற்காக தாம் அம்மாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்ததாக
நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரிப்பது மற்றும் நீதியை
நிலைநாட்டுவதில் தாம் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும்
அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
எனது இந்த முடிவு அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியைத் தராது
என்று எனக்குத் தெரியும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்
இஸ்ரேல் ஆதரவாளன் என முத்திரைக் குத்தப்பட மாட்டேன் என
கருதுகிறேன். அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அனைத்து
ஆசியா நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து
கொள்கின்றனர் என்று அவர் சொன்னார்.
நீதியை நிலைநாட்டுவது மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைப்
போராட்டத்தை ஆதரிப்பதில் நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும்
போக்கை கடைபிடிக்காவிட்டாலும் அரச தந்திர உறவுகள் மற்றும்
அமைதியைக் காக்கும் விஷயத்திற்கு முன்னுரிமை அளிக்க
விரும்புகிறேன் என்றார் அவர்.
நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன். நாட்டின்
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சுபிட்சத்தை பாதுகாக்க விரும்புகிறேன் எனக் கூறிய அவர், ஏபெக் 2023 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தமக்கு நெருக்குதல் தரப்படுவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.




