ஷா ஆலம், நவ 2: டீசல் மானியத்திற்கு அரசாங்கம் ஒரு மாதத்திற்கு RM1 பில்லியனுக்கும் அல்லது வருடத்திற்கு RM14 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடுகிறது.
உலக அளவில் உண்மையான சந்தை விலை உயர்வால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் மீன்பிடி, வணிக மற்றும் தனியார் வாகனத் துறைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், டீசல் பொருட்களுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களின் மொத்தத் தொகை RM35 பில்லியனைத் தாண்டியுள்ளது.
"அந்தத் தொகையில், மீன்பிடித் துறைக்கான சூப்பர் டீசல் மானியத்திற்காக RM3.9 பில்லியன் மற்றும் பொதுப் போக்குவரத்திற்காக கிட்டத்தட்ட RM1 பில்லியன் செலவிடப்பட்டது.
" டீசல் கொள்முதல் விலையும் பெட்ரோல் நிலையங்களில் டீசலின் சில்லறை விலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் சரக்கு வாகனத் துறைக்கு சூப்பர் மானிய விலை ஒதுக்கப்படவில்லை," என்று அவர் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவேற்றிய எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அரசாங்கம் செலுத்திய டீசல் மானியத்தைப் பற்றி அறிய விரும்பிய வோங் சூ யீ (ஹராப்பான் – குளுவாங்) வின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.




