ஷா ஆலம், நவ 2- ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு உதவும் வகையில்
நான்காம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் தொகை (எஸ்.டி.ஆர்.) தீபாவளி
பண்டிகைக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும் என்று கோல சிலாங்கூர்
தொகுதி கெஅடிலான் தலைவர் தீபன் சுப்பிரமணியம் நிதியமைச்சைக்
கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்மாதம் 12ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடப்படவுள்ள நிலையில்
வசதி குறைந்தவர்களும் அந்த பெருநாள் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு
ஏதுவாக இந்த உதவித் தொகை முன்கூட்டியே வழங்ப்படுவது
அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ளன. வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பு காரணமாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களால்
பெருநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு நோன்பு பெருநாளின் போது
வழங்கப்பட்டதைப் போல் தீபாவளிக்கும் முன்கூட்டியே ரஹ்மா ரொக்கத்
உதவித் தொகையை வழங்குவதன் மூலம் மக்களின் சுமையைக்
குறைப்பதற்கு உதவ முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கோழிக்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியதால் அந்த
உணவுப் பொருள் விலையேற்றம் காணப்படுவதற்கான சாத்தியம்
உள்ளதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு வர்த்தக அமைச்சு சிறப்பு
தீபாவளி சோதனை நடவடிக்கையை வர்த்தக மையங்கள் மீது
மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், மாணவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக
பள்ளிகள் மற்றும் அரசாங்கம் உயர்கல்விக் கூடங்களில் கூடுதல்
விடுமுறையை கல்வியமைச்சு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையையும்
தீபன் முன்வைத்தார்.




