கோலாலம்பூர், நவ 2 - எண்பது சதவீத மலேசியர்கள் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய ஆர்வத்துடன் இருக்கும் வேளையில் அவர்களில் 72 விழுக்காட்டினர் இந்த ஆண்டு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது சந்தை ஆய்வு நிறுவனமான ஈரோ எஸிஸ்டன் மற்றும் இப்ஸோஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 69 சதவீதம் பேர் 2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் 41 சதவீதம் மலேசியர்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியான் சந்தைகளை விரும்புகின்றர் என்று இ.ஏ.தென்கிழக்கு ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி பிலிப் டெமாங்கேட் கூறினார்.
மலேசியர்கள் ஒரு பயணத்திற்கு சராசரியாக அனைத்து செலவுகளையும் சேர்த்து 6,500 வெள்ளி வரை செலவழிக்கத் தயாராக உள்ளனர். பயண காலம் சராசரியாக 10 நாட்கள் ஆகும்.
பட்ஜெட் மற்றும் கால அளவு மற்ற பிராந்தியங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பணவீக்கம் மற்றும் செலவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மலேசியர்களின் பயண ஆர்வத்தை எதிர்மறையாக பாதிக்கும் முதல் காரணம் பணவீக்கம் ஆகும். அதே நேரத்தில் கோவிட்-19 இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், பணவீக்க காரணத்தால் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் பயண ஆர்வத்தை பாதித்துள்ளது என அவர் சொன்னார்.




