ஈப்போ, அக் 31: கம்போங் பெரா, கிரிக்கில் தனது உறவினர் வீட்டில் இருந்தபோது 12 வயது சிறுவன், அவனது தந்தையால் அடித்து உதைக்க பட்டதில் காயமடைந்தான்.
இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கிரிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூத் தெரிவித்தார்.
"சந்தேக நபர் (35) அச்சிறுவனின் உடலின் பின்புறத்தில் குத்தி உதைத்தார். மேலும் அவரது கையில் இருந்த கத்தியைக் கொண்டு அச்சிறுவனைத் தாக்க முயற்சித்தார்," என்று சுல்கிஃப்லி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
விசாரணையின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சிறுவனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவனது அத்தை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் கிரிக் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அச்சிறுவனின் உடல் மற்றும் தொடையின் பின்புறத்தில் 'மென்மையான திசு காயம்' ஏற்பட்டது கண்டறியப்பட்டது என்றும் சுல்கிஃப்லி கூறினார்.
சம்பவத்திற்கான காரணத்தைக் காவல்துறையினர் இன்னும் விசாரித்து வருகின்றனர், மேலும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (ஏ) இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
- பெர்னாமா








