கோலாலம்பூர், அக்.31- அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் மலேசியா வன்மையாக நிராகரிப்பதோடு பாலஸ்தீனத்தில் அப்பாவி உயிர்களைக் கொல்லும் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கும் நடவடிக்கைகளையும் அது திட்டவட்டமாக கண்டிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மக்களவையில் இன்று அனைத்துலகப் பார்வையாளர்களுக்காக சபாநாயகரின் அனுமதியுடன் ஆங்கிலத்தில் பேசிய அன்வார், பொதுமக்கள், வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுவது, அதன் விளைவாக அப்பாவி உயிர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் படுகொலை செய்யப்படுவதை மலேசியாவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக கூறினார்.
நாம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்ரேலின் ஸியோனிச அரசு ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாகும். எனவே அது சர்வதேச சட்டத்தின் கீழ் பொறுப்புகளை சுமக்கிறது . இந்த குற்றச் செயல்கள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்றன. இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக, உணவு, தண்ணீர், மனிதாபிமான உதவி, மின்சாரம் போன்றவற்றை துண்டித்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானதாகும் என்றார் அவர்.
நீதிக்கான போராட்டத்திற்கு எல்லைகள் தெரியாது என்பதையும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு ஆதரவாக மலேசியா ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்பதையும் பாலஸ்தீனத்தின் வேதனையான நிலைமை நினைவூட்டுவதாக அன்வார் கூறினார்.
சர்வதேச அமைப்பின் நம்பகத்தன்மையே ஆபத்தில் இருப்பதாகக் கூறிய அன்வார், உலகில் அமைதியை நிலைநாட்ட முயலும் அமைப்பு முறையைப் பாதுகாக்க மலேசியா தனது கருத்தைக் கூறும் அதேவேளையில் மற்றவர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் வேண்டும் என்று கூறினார்.
உலகில் நடக்கும் நிகழ்வுகளால் மலேசியா பாதிக்கப்படவில்லை என்று நினைப்பது முட்டாள்தனமான செயல். நாங்கள் ஒரு வர்த்தக நாடு. பிராந்திய மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, எங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அந்நிய நேரடி முதலீடுகளை நாடுகிறோம். எனவே, உலகில் எங்கும் நடக்கும் சம்பவங்களுடன் மலேசியா ஆழமாகவும் வலுவாகவும் பிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நாங்கள் கடினமான பணியைத் தொடங்கி விட்டோம். நீண்ட காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன். நாங்கள் ஒரு கடுமையான சுதந்திர தேசமாக இருப்போம். மேலும், நீதி மற்றும் சுதந்திரம் குறித்த பிரச்சனையில் எங்கள் உரிமையையும் நிலைப்பாட்டையும் அச்சமின்றி இல்லாமல் வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.








