ஷா ஆலம், அக் 31- நாளை தொடங்கி கோழிக்கான உதவித் தொகை மற்றும் உச்சவரம்பு விலை கட்டுப்பாடு நீக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு இலக்கிடப்பட்டத் தரப்பினர் பயன் பெறுவதை நோக்கமாகக் கொண்ட சரியான நடவடிக்கையாக விளங்குகிறது.
கோழியின் விலையைச் சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் நடைமுறை உண்மையான பலனைத் தரும் என்பதோடு மிகவும் உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு மட்டுமே உதவித் தொகை திட்டம் பயனளிப்பதை உறுதி செய்ய இயலும் என்று அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமானால் அரிசி, முட்டை உள்பட அனைத்து பொருள்களின் விலையும் சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது எனது மனதில் எப்போதும் உள்ள சிந்தனையாகும் என அவர் தெரிவித்தார்.
அந்த உதவித் தொகைகளை நாம் பற்றுச் சீட்டுகள் வாயிலாக அல்லது வேறு ரூபங்களில் தகுதி உள்ளவர்களுக்கு மறுபடியும் வழங்குவோம். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள் மட்டுமே உதவித் தொகையின் பலனை அனுபவிக்க முடியும் என்றார் அவர்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வேளாண் சாதனையாளர் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
கோழிக்கான உதவித் தொகை மற்றும் உச்சவரம்பு விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நீக்குவதாக விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு நேற்று கூறியிருந்தார்.








