புத்ராஜெயா, அக் 31- எவரெஸ்ட் மலையின் பேஸ் கேம்ப் எனப்படும்
அடிவார முகாம் நோக்கி பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சின்
அதிகாரி கடந்த திங்கள்கிழமை மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் கந்தசாமி (வயது 38) என்ற அந்த அதிகாரி நேற்று உள்ளுர்
நேரப்படி 2.30 மணியளவில் கோராக் ஷெப் எனுமிடத்தில் உயிரிழந்தார்.
பார்த்திபனின் உடலை கோராக் ஷெப் பகுதியிலிருந்து நேப்பாளத்
தலைநகர் காட்மண்டுவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில்
அந்நாட்டிலுள் மலேசிய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும்
காட்மண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் உடற்கூராய்வு
மேற்கொள்ளப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில்
கூறியது.
உடற்கூறு பரிசோதனை மற்றும் ஆவண தயாரிப்பு பணிகள் முற்றுப்
பெற்றவுடன் அவரது நல்லுடல் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும்
என்றும் அது தெரிவித்தது.
பார்த்திபன் உடலை மலேசியாவுக்குக் கொண்டு வரும் பணியை
நேப்பாளத்திலுள்ள மலேசியத் தூதரகம் மேற்கொள்ளும் என்றும் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலமான பார்த்தின் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சு தனது
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது.








