சிரம்பான், அக் 31- நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் மேற்கொண்ட 'ஒப் சபோங்' சோதனை நடவடிக்கையில் நீலாய் வட்டாரத்தில் 11 சிறார்கள் உட்பட 216 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 71 பெண்களும் அடங்குவர் என மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கென்னத் டான் ஐ கியாங் கூறினார்.
இரண்டு முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பிராயத்தினரையும் உள்ளடக்கிய அவர்கள் அனைவரும் மியன்மார், இந்தோனேசியா, வங்காளதேசம், நேப்பாளம், கம்போடியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லெங்கெங் குடிநுழைவு தடுப்புக் காவல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 74 சோதனை நடவடிக்கைகளில் ஊராட்சி மன்றங்கள், காவல்துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைகளும் பங்கு கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 11 வரை மொத்தம் 184 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்ட வேளையில் 1963ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் மற்றும் குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டதோடு மூன்று முதலாளிகள் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது என அவர் மேலும் கூறினார்.
நீலாய் மாவட்டத்தில் உள்ள தளவாடங்கள் மற்றும் கார்ப்பெட் எனப்படும் தரைவிரிப்பு கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என டான் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.








