கோலாலம்பூர், அக் 30: பினாங்கு பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வைரலான வீடியோ போலியானது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (எல்எல்எம்) இன்று தெரிவித்துள்ளது.
பினாங்கு பாலம் (ஜேபிபி) மற்றும் சுல்தான் அப்துல் ஹலீம் முஹாட்ஸாம் ஷா பாலம் (ஜேஎஸ்ஏஎச்எம்எஸ்) ஆகியவற்றில் இந்த சம்பவம் நடக்கவில்லை என்பதை எல்எல்எம் இன்று அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது.
"PLUS Malaysia Berhad மற்றும் Jambatan Kedua Sdn Bhd (JKSB) ஆகியோரின் விசாரணையின் முடிவு, பாலங்களின் கட்டமைப்பின் எந்தப் பகுதியிலும் இந்தச் சம்பவம் நடக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.
மக்கள், குறிப்பாக அவ்விரண்டு பாலங்களைப் பயன்படுத்தும் பயனர்களின் தவறான புரிதல்கள் மற்றும் கவலைகளைத் தவிர்க்க, அனைத்து தரப்பினரும் நம்பகத்தன்மையற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்று எல்எல்எம் அறிவுறுத்துகிறது.
இந்த சம்பவம் சுல்தான் அப்துல் ஹலீம் முஹாட்ஸாம் ஷா பாலத்தில் நடக்கவில்லை, மாறாக வைரலான வீடியோ 2014 இல் வெளிநாட்டில் நடந்த பழைய பதிவு என்று பினாங்கு உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர், சைரில் கீர் ஜோஹாரி கூறினார்.
– பெர்னாமா








