கோலாலம்பூர், அக் 30 - குறைந்த கட்டண விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகக் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இரண்டு சந்தேக நபர்கள் நேற்று விடுவிக்கப்பட்ட வேளையில் மற்றொருவரின் தடுப்புக் காவல் அனுமதி முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று விடுவிக்கப்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன் இணை நிறுவனருடன் தொடர்புடையதாக நம்பப்படும் முதலீட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக நேற்று பெர்னாமா தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காகக் கடந்த 26ஆம் தேதி ஐ-செர்வ் முதலீட்டு நிறுவன வழக்கின் வழக்கறிஞர் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மை ஏர்லைன் நிறுவனத்தின் இணை நிறுவனருடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் அனைவரும் ஐ-செர்வ் நிறுவனத்தில் நிதி உதவியாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேலாளர், வழக்கறிஞர் மற்றும் பங்குதாரர் ஆகிய பதவிகளை வகித்து வந்ததாகக் கூறப்படுகிறது.








