கோலாலம்பூர், அக் 30 - எதிர்வரும் புதன் கிழமை (நவம்பர் 1) தொடங்கி
கோழிகளுக்கான உதவித் தொகை மற்றும் விலைக்காட்டுப்பாட்டு
நடைமுறையைத் தொடர்வதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
எனினும், நடப்பு செயல்முறைக்கேற்ப ஏ.பி. மற்றும் சி கிரேட்
முட்டைகளுக்கான உதவித் தொகையை அரசாங்கம் தொடரும் என்று
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு
கூறினார்.
அரசாங்கம் கட்டங் கட்டமாக அமல்படுத்தி வரும் உதவித் தொகை
மறுசீரமைப்பு அணுகுமுறைக்கேற்ப கோழிக்கான உதவித் தொகை
நிறுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
கோழி மற்றும் முட்டைக்கு உதவித் தொகை வழங்குவதற்காக அரசாங்கம்
இவ்வாண்டு பிப்ரவரி வரை 380 கோடி வெள்ளியை செலவிட்டுள்ளதாக
இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த உதவித் தொகையின் மூலம் வெளிநாட்டினரும் உயர்
வருமானம் பெறும் தரப்பினரும் பயன் பெற்று வருகின்றனர். ஆகவே,
வீண் விரயத்தை தடுக்கும் நோக்கில் கோழிக்கான உதவித் தொகை
நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கோழிக்கான மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கை நடப்பு சந்தை
விலை மற்றும் விலை போக்கை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோழியின் பண்ணை விலை மற்றும் உற்பத்திச் செலவினம்
நிலைப் பெற்று உச்சவரம்பு விலையை விட நடப்பு சந்தை விலை
குறைவாக இருப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.
நடப்பு சந்தை நிலைக்கு ஏற்ப கோழியின் விலையை நிர்ணயிக்கும்
நடைமுறை அமலுக்கு வந்தவுடன் அந்த உணவு மூலப் பொருளின் விலை நியாயமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் அவர் கூறினார்.








