கோத்தா கினபாலு, அக் 26 - தங்கக் கட்டிகள் விற்பனையின் உண்மையான வருமானத்தை விலைப்பட்டியலில் தெரிவிக்காமல் சபா அரசை ஏமாற்றியதற்காக தந்தை மற்றும் மகன் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் தலா 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இதனால் RM1.3 மில்லியன் ராயல்டி இழப்பு ஏற்பட்டது.
லோ ஃபூய் மிங் (67) மற்றும் அவரது மகன் லோ தெக் யோங் (42) ஒரு சுரங்க நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் ஆவர். நீதிபதி ஜேசன் ஜூகா முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், புக்கிட் மந்திரி, தவாவில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் ராயல்டி கணக்கீடுகளுக்காக நில அளவைத் துறைக்குச் (JTU) சமர்ப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலில் தெரிவிக்காமல் ஒரு நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாக 26 தங்கக் கட்டிகளை விற்றதாகக் கூறப்படுகிறது.
நில அளவைத் துறையின் நிலம் மற்றும் கனிமச் சுரங்க குத்தகையின் அடிப்படையில் புக்கிட் மந்திரியில் பெறப்பட்ட தங்கத்தின் விற்பனையில் சுரங்க நிறுவனம் ஐந்து சதவீத ராயல்டியைச் செலுத்த வேண்டும்.
அவர்கள் அக்டோபர் 2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
லோ ஃபூய் மிங் தண்டனைச் சட்டத்தின் 418வது பிரிவின் கீழ் 24 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், அதே சமயம் தெக் யோங்கின் குற்றச்சாட்டுகள் தண்டனைச் சட்டத்தின் 109வது பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்.
நீதிபதி ஜேசன், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் RM100,000 பிணையில் விடுவிக்க அனுமதித்ததுடன், அவர்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். மேலும் அடுத்த வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- பெர்னாமா








