கோலாலம்பூர், அக் 25 - பெர்சத்து கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜானுக்கு எதிராக 55 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கிய 18 சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகள் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.
ஜானா விபாவா திட்டத்தில் நிகழந்த ஊழல் தொடர்பில் அவர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சுஸானா ஹூசேன் முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் தனித்தனியே வாசிக்கப்பட்ட போது, 48 வயதான வான் சைபுல் அவற்றை மறுத்து விசாரணை கோரினார்.
நான் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோருகிறேன் என்று குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெளிவான குரலில் கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட 16 லட்சம் வெள்ளியை மாற்றியதாக 16 குற்றச்சாட்டுகளையும் 39 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பணத்தை பயன்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர் நோக்கியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதிக்கும் நவம்பர் 13 ஆம் தேதிக்கும் இடையே புக்கிட் துங்கு சி.ஐ.எம்.பி. வங்கி கிளையில் இக் குற்றங்களைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பொருளீட்டல் சட்டத்தின் 4(1)(பி) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பணம் அல்லது பொருள்களில் இருந்து ஐந்து மடங்குத் தொகை அல்லது 50 லட்சம் வெள்ளியில் அதிகமானத் தொகை அபராதமாக விதிக்க இந்த சட்ட விதி வகை செய்கிறது.








