ஷா ஆலம், அக் 25 - சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் மருந்துக
அமலாக்கப் கிளையின் வாயிலாகக் கடந்த 2021ஆம் ஆண்டு முதல்
மேற்கொள்ளபட்ட சோதனைகளில் 56,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள
பதிவு பெறாத டைப்பாய்டு தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்மாதம் 18ஆம் தேதி மாநிலத்திலுள்ள ஐந்து தனியார் கிளினிக்குகளில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 12,000 வெள்ளி மதிப்புள்ள டைபாய்டு
காய்ச்சல் தடுப்பூசிகளும் மீட்கப்பட்டதாக மாநிலச் சுகாதாரத் துறை
இயக்குநர் டத்தோ டாக்டர் ஙகாடிமான் ஷாஹ்ரி கூறினார்.
தனியார் கிளினிக்குகள் சுகாதார அமைச்சின் மருந்து கட்டுப்பாட்டு
அமலாக்கப் பிரிவில் பதிவு பெறாத டைபாய்டு தடுப்பூசிகளை தனியார்
கிளினிக்குகள் நோயாளிகளுக்கு வழங்குவது தொடர்பில் மாநில
சுகாதாரத் துறை பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த புகார்கள் மீது 1952ஆம் ஆண்டு மருந்து விற்பனை சட்டத்தின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், குற்றம்
நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு 25,000 வெள்ளி
வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாதச்
சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார்.
அதே சமயம், இத்தகைய குற்றங்களைப் புரியும் நிறுவனங்களுக்கு 50,000
வெள்ளி வரை அபராதம் விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது என்றார்
அவர்.
இதனிடையே, தங்கள் உடல் நலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய
தாங்கள் வாங்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்கள் சுகாதார
அமைச்சின் மருந்து கட்டுபாட்டு அமலாக்கத் தரப்பிடம் பதிவு
பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளும்படி பொது மக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.








