கோலாலம்பூர், அக் 25- பாலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடி தொடர்பான
செய்திகளுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் டிக்டாக்
தாய் நிறுவனத்துடன் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு
வியாழன்று சந்திப்பு நடத்தும்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்திற்கும் அந்த
நிறுவனத்திற்கும் இடையே இந்த சந்திப்பு நடைபெறும் என்று அமைச்சர்
ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் தாய் நிறுவனத்துடன் நாம் சந்திப்பு நடத்துவது
டிக்டாக்கை பதட்டமடையச் செய்துள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்றிரவு இங்குள்ள அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெற்ற
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹமாஸ் மற்றும் இதர வார்த்தைகளைப் பயன்படுத்தி தாங்கள்
உருவாக்கும் உள்ளடக்கங்களை அந்த சமூக ஊடக நிறுவனம் இயல்பாக
நீக்கி விடுவதாக சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் முன்வைத்த புகார்
தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நேற்றைய பேரணி குறித்து கருத்துரைத்த ஃபாஹ்மி, இந்த பேரணியில்
15,000 பேர் வரை கலந்து கொண்டது பாலஸ்தீனர்களுக்கு மலேசியர்கள்
அளித்து வரும் ஆதரவைப் புலப்படுத்தும் விதமாக உள்ளது என
சொன்னார்.
பாலஸ்தீனத்திற்கு உதவ விரும்பும் பொது மக்கள் நிலைமையை
தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொள்ள முனையும் பொறுப்பற்றத்
தரப்பினர் அல்லது மோசடிக் கும்பலின் வலையில் சிக்காமலிருக்க
அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் அல்லது துறைகள் வாயிலாக உதவிகளை
வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








