குவாந்தான், அக் 24 - சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்
பெஞ்சானா கெர்ஜாயா 2.0 ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 59,560 வெள்ளி
மதிப்புள்ள போலி பணக்கோரிக்கையைச் சமர்ப்பித்ததாக நிறுவனம் ஒன்றின்
நிர்வாக இயக்குநர் மீது இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.
தமக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் செந்தில்
குமார் (வயது 38) என்ற அந்த நிர்வாக இயக்குநர் மறுத்து விசாரணை
கோரினார்.
எஸ்.பி. அக்ரோ இண்டஸ்ட்ரி சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் ஊழியர்கள்
அல்லாத 14 பேருக்காக 8,800 வெள்ளி ஊக்குவிப்புத் தொகை
கோரிக்கைக்கான ஊழியர் உறுதிப் பத்திரத்தை சமர்ப்பித்ததாக அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி இங்குள்ள விஸ்மா
பெர்கேசோவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்
பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 18வது பிரிவு
மற்றும் அதே சட்டத்தின் 24(2) வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக
குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டப் பிரிவுகளின் கீழ்
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 20 ஆண்டுச் சிறை,
பணக்கோரிக்கை மதிப்பில் ஐந்து மடங்குத் தொகை அல்லது 10,000
வெள்ளி இவற்றில் அதிகமானத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இது தவிர போலியான பத்திரங்களை உண்மையானவை என நம்ப
வைத்தது தொடர்பில் மேலும் நான்கு விருப்பக் குற்றச்சாட்டுகளையும்
செந்தில் குமார் எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட செந்தில் குமாரை 30,00 வெள்ளி ஜாமீனில்
விடுவிக்கவும் கூடுதல் நிபந்தனையாக அனைத்துலக கடப்பிதழை
நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதேவேளையில் ஒவ்வொரு மாதமும்
ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும்
எம்.ஏ.சி.சி. வழக்கறிஞர் ரிஃபா இஸாத்தி நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்.
செந்தில் குமாரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 30,000 வெள்ளி ஜாமீனில்
விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி டத்தோ அகமது ஜம்ஜானி முகமது
ஜைன், கூடுதல் நிபந்தனைகளையும் பின்பற்ற உத்தரவிட்டார்.
ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர்
23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.








