கோத்தா பாரு, அக் 24- இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு முழு தயார் நிலையில் இருக்குமாறு 24,283 அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் உள்ள 13,475 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களில் 80 விழுக்காட்டினரின் விடுமுறை முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்
இருப்பினும், மொத்த எண்ணிக்கையில், 20 விழுக்காட்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விடுமுறையும் பேரிடர் சூழ்நிலையைப் பொறுத்து அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாவட்டம் அல்லது மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கையை வெள்ளச் செயலகம் அறிவித்தவுடன் இந்த விடுமுறை முடக்கம் தொடங்கும் என்று இன்று இங்குள்ள கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதனிடையே, கிழக்கு கரை மாநிலங்களில் மீட்புத் தளவாடங்களை முன்கூட்டியே வைப்பதற்கு ஏதுவாக முன் களத் தளத்தை உருவாக்குவதற்கான அணுகுமுறையையும் தனது தரப்பு வகுத்துள்ளதாக அப்துல் வஹாப் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை 2023 ஆம் ஆண்டு வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்படும் முதல் மாநிலங்களாக கிழக்கு கரை மாநிலங்கள் இருக்கும் என்று அத்துறை கணித்துள்ளது என்றார் அவர்.
வெள்ளத்தின் போது மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக 15 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய 13 விரைவுக் குழுக்களை தீயணைப்புத் துறை அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








