ஈப்போ, அக் 24- தொலைபேசி அழைப்பின் மூலம் பொருள் பட்டுவாடா மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான பெண்மணி 127,560 வெள்ளியை இழந்தார்.
அறுபத்தோரு வயதுடைய அந்த பெண்மணி கடந்த மாதம் 25ஆம் தேதி அனாமதேய நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.
பொருள் பட்டுவாடா நிறுவனத்தின் ஊழியர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் பிரச்சனைக்குரிய பொட்டலம் ஒன்று தங்கள் வசம் உள்ளதாக கூறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
அந்த பொருள் பட்டுவாடா நிறுவனப் பணியாளர் தொலைபேசி அழைப்பை பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்துடன் இணைத்துள்ளார். பின்னர் அந்த பெண், இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன் ஆகியோரிடம் பேசியுள்ளார்.
வங்கி பண பட்டுவாடா கார்டின் முகப்பு பக்கத்தை படம் பிடித்து தங்களுக்கு அனுப்பும்படி போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட நபர்கள் அம்மாதுவைப் பணித்துள்ளனர் என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த மூதாட்டியின் கைபேசியை அவரின் மகள் சோதனையிட்ட போது தான் இந்த மோசடிச் சம்பவம் அவர்களுக்கு தெரிய வந்தது எனக் கூறிய அவர், இம்மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அம்மாது மூன்று பண பரிமாற்றங்கள் மூலம் 127,560 வெள்ளியை அக்கும்பலின் வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார் என்றார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.








