ஈப்போ, அக் 24- பணியில் இருந்த போலீஸ்காரர் மீது கொலைத் தாக்குதல்
மேற்கொள்ள முயன்ற இரு ஆடவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இங்குள்ள கம்போங் காஜாவில் நேற்று காலை நிகழ்ந்தது.
இரு ஆடவர்கள் பாராங்கத்தியேந்தி கொள்ளையிட முயன்றது தொடர்பில்
ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகம் நேற்று காலை 11.30
மணியளவில் புகாரைப் பெற்றதாக ஹிலிர் பேராக் மாவட்டப் போலீஸ்
தலைவர் ஏசிபி அகமது அட்னான் பாஸ்ரி கூறினார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகளை
அடையாளம் கண்ட ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின்
குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்களை ஈப்போவிலிருந்து கம்போங்
காஜா வரை பின்தொடர்ந்து சென்றதாக அவர் தெரிவித்தார்.
போலீசார் தங்களைப் பின்தொடர்வதை அறிந்த 28 மற்றும் 31 வயதுடைய
அவ்விரு கொள்ளையர்களும் தாங்கள் பயணம் செய்த பெரேடுவா மைவி
காரை வேகமாகச் செலுத்தி அங்கிருந்து தப்ப முயன்றனர். எனினும், லாபு
குபோங்கிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே அவ்விருவரையும்
போலீசார் வெற்றிகரமாக மடக்கினர்.
அவர்களை கைது செய்ய முயன்ற போது திடீரென் காரை திருப்பி
பின்னோக்கி வேகமாகச் செலுத்தி போலீஸ் வாகனத்தை மோதித்
தள்ளினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இச்சமயம் போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை நெருங்கி காரின் பின்புறக்
கதவைத் திறந்து சந்தேகப் பேர்வழியைக் கைது செய்ய முயன்ற போது
அந்த கார் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் அந்த போலீஸ்காரர்
காருடன் இழுத்து செல்லப்பட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக அந்த காரின் கண்ணாடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இச்சமயம் காரின் பின்புறம் இருந்த சந்தேக பேர்வழி அங்கிருந்து ஓடி தப்ப முயன்றான். எனினும் போலீஸ்காரர்கள் அவனை மடக்கிப் பிடித்தனர் என்றார் அவர்.
காரில் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை ஈப்போ, கம்போங் ராப்பாட்டில் பொது மக்கள் வளைத்துப் பிடித்தனர் என்று அவர் மேலும் சொன்னார்.








