கெய்ரோ, அக் 24 - இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா
மக்களுக்கு உதவி வழங்க விரும்பும் தன்னார்வலர்களும் அரசு சாரா
அமைப்புகளும் அவசியமாகத் தேவைப்படக்கூடிய பொருள்களை மட்டும்
வழங்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்
கொண்டுள்ளார்.
தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் நோக்கம் உயரியதாக
இருந்தாலும் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உண்மையில் பயன்தரக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக
அவர்கள் சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் முன்கூட்டியே விவாதிப்பது
நல்லது என அவர் சொன்னார்.
நமது விருப்பத்திற்கேற்ப பொருள்களை வாங்க வேண்டாம். இத்தகைய
ஏற்பாட்டு ஆதரவை வழங்கும் அமைப்புகள் மத்தியில் காணப்படும்
பிரச்சனையே இதுதான். சில வேளைகளில் அவர்கள் வாங்கும் பொருள்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். அவ்வாறு செய்ய
வேண்டாம். காஸா மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை முதலில்
கேட்டறிய வேண்டும் என்றார் அவர்.
மருந்துகளாக இருப்பின், அவை முறையான லேபில்களைக்
கொண்டவையாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் பல்வேறு
விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். உணவுப் பொருள்களும்
அப்படித்தான். அவர்களால் சமைக்க முடியாது. டின்களில் அடைக்கப்பட்ட
தயாரான உணவுகளைத்தான் வழங்க வேண்டும். சிலர் துரித மீ போன்ற
உணவுகளை வழங்குகின்றனர். அவர்கள் அவற்றை உண்பதில்லை என்று
அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகவே, இவ்விவகாரத்தில் காஸா மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து கொள்ளாமல் எதையும் வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று எகிப்துக்கான பயணத்தின் இறுதி நாளில் நடைபெற்ற மலேசிய செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் கூறினார்.








