கோலாலம்பூர், அக் 24 - கிளானா ஜெயா தடத்தில் பரபரப்பான
வேளைகளில் மூன்று நிமிட இடைவெளியில் எல்.ஆர்.டி. இலகு ரயில்
சேவையை வழங்கும் இலக்கு இம்மாத இறுதியில் அடையப்படும்.
அந்த தடத்தில் தற்போது பயணச் சேவையின் இடைவெளி 3.8
நிமிடங்களாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. கடந்தாண்டு
டிசம்பர் மாதம் 4.4 நிமிடங்களாக இருந்த பயணச் சேவை இடைவெளி
கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய இரயில்கள் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டதன் மூலம் 3.8 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டதாக அது
தெரிவித்தது.
பயண இடைவெளியை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
ப்ரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நோக்கத்தின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நான்கு புதிய
இரயில்கள் ( கிளானா ஜெயா தடத்தில்) சேவையில் ஈடுபடுத்தப்பட்டன
என்று அது கூறியது.
புதிதாக மேலும் 27 இரயில்களை வாங்கும் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு
டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 16 இரயில்கள் தருவிக்கப்படும் என்று
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள அமைச்சின் வாய்மொழி
பதிலில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, எம்.ஆர்.டி. எனப்படும் காஜாங் மாஸ் ரெப்பிட் டிரான்சிட்
சேவை குறித்து கருத்துரைத்த அமைச்சு, அந்த தடத்திற்கான இரயில்
சக்கரங்களை மாற்றும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது பரபரப்பான வேளைகளில் ஆறு நிமிடங்களாக இருக்கும் பயணச்
சேவையின் இடைவெளி அடுத்தாண்டு ஜனவரியில் நான்கு நிமிடங்களாகக்
குறைக்கப்படும் எனத் தெரிவித்தது.
கிளானா ஜெயா எல்.ஆர்.டி. மற்றும் காஜாங் எம்.ஆர்.டி. சேவைகளை
மேம்படுத்துவதற்கு ப்ராசரானா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தும் இரயில் பாகங்களைப்
பழுதுபார்ப்பதற்கான புதிய திட்டமும் அதில் அடங்கும்.








