ஜோர்ஜ் டவுன், அக் 24: தாமான் மெலாத்தி, பயான் பாருவில் உள்ள ஒரு வீட்டில் லார்வா மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்த பினாங்கு மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்பிபி) ஊழியரை அறைந்ததற்காக ஆடவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ஜே.கே.என்.பி.பி அதிகாரி சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் காலை 10.30 மணியளவில் ஏடிஸ் கொசுக்கள் இருக்கிறதா என்று சோதித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகத் தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் கமருல் ரிசல் ஜெனல் தெரிவித்தார்.
அந்த அதிகாரி குறிப்பிட்ட வீட்டில் லார்வா மாதிரிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது அந்நபர் திடீரென வந்து அதிகாரியின் நெற்றியில் ஒரு சிறிய காயம் ஏற்படும் வரை அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார்.
"ஜேகே என்பிபி அதிகாரி இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். நாங்கள் 44 வயதுடைய நபரை அவரது வீட்டில் நேற்று கைது செய்தோம், ஏனெனில் அவர் சம்பவத்தின் போது அரசு ஊழியரை அவரின் பணியைச் செய்ய விடாமல் தடுத்துள்ள்ளார்," என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 332 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் கமருல் ரிசல் கூறினார்.
– பெர்னாமா








