கோலாலம்பூர், அக் 24 - அமைதிப் பேரணி அல்லது மறியலின் போது
நிகழ்த்தப்படும் உரை மீதான வழிகாட்டி மற்றும் பொதுச் சேவையை
வழங்குவதில் வர்த்தக வியூகம் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட
விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை
அளிக்கப்படும்.
அமைதிப் பேரணிகளில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத
விஷயங்கள் குறித்து அரசாங்கம் வழிகாட்டியை வெளியிட்டுள்ளதா என்று
மாச்சாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் அகமது
பைசால் வான் அகமது கமால் உள்துறை அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம்
பெற்றுள்ள கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது வான் அகமது
பைசால் இந்தக் கேள்வியை முன்வைப்பார் என்று அந்த நிகழ்ச்சி நிரல்
கூறுகிறது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் உலக புத்தாக்க குறியீட்டில் இடம் பெற்றுள்ள
30 நாடுகளில் ஒன்றாக மலேசியாவை இடம் பெறச் செய்வதற்கு ஏதுவாக
பொதுச் சேவைத் துறையில் இணைக்கப்படவுள்ள புத்தாக்க
நடவடிக்கைகள் குறித்து அறிவியல், தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத் துறை
அமைச்சரிடம் சிகாமாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர்
ஆர்.யுனேஸ்வரன் கேள்வியெழுப்புவார்.
உயர் தரம் கொண்ட ஜியோன் ஜியோஸியா ரக திடலை புக்கிட் ஜாலில்
தேசிய அரங்கம் தவிர்த்து இதர அரங்கங்களில் பயன்படுத்துவதற்கான
திட்டம் உள்ளதா என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சரிடம் மெர்சிங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர்
முகமது இஸ்லாவுடின் வினவுவார்.
அமைச்சரின் கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு 2024ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இரண்டாவது வாரமாக இன்று
காலை மீண்டும் தொடரும்.








