ஈப்போ, அக் 23 - பேராக் விளையாட்டரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேராக் எஃப்சி மற்றும் ஜொகூர் டாருல் தாக்சிம் குழுக்களுக்கிடையிலான மலேசியக் கிண்ண கால்பந்து போட்டியின் போது கத்தி வைத்திருந்ததாக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை பாதுகாவலர் ஒருவர் மறுத்து விசாரணை கோரினார்.
அஸ்ருல் ஃபைஸ் முகமது ரோஸ்லி (வயது 31) என்ற அந்நபர் மாஜிஸ்திரேட் சிட்டி நோரா ஷெரீப் முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த வியாழன் இரவு 8.45 மணியளவில் இங்குள்ள இண்ட்ரா முலியா ஸ்டேடியத்தின் 'பி' நுழைவாயிலில் கத்தியை வைத்திருந்ததாக வெடி பொருள் மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6 (1) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.
அந்நபரை ஒரு உத்தரவாதத்துடன் 1,500 ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், வழக்கை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, அஸ்ருல் ஃபைஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். காத்தன், தனது கட்சிக்காரர் மாதம் 1,800 வெள்ளி மட்டுமே சம்பாதிப்பதோடு அவர் கர்ப்பிணி மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் பெற்றோரரைக் கவனிக்க வேண்டியுள்ளதால் குறைந்த ஜாமீன் வழங்குப்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.








