அலோர்ஸ்டார், அக் 23- பதினான்கு வயதுப் பெண் ஓட்டிச் சென்ற கார்
மோட்டார் சைக்கிளை மோதியதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்த தோடு அவரின் மூத்த சகோதரி காயங்களுக்குள்ளானார்.
இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் கோல கெடாவில் நேற்று மாலை
நிகழ்ந்தது.
இரவு 7.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை
ஓட்டிச் சென்ற நுர் ஷபிகா அப்துல்லா (வயது 32) சம்பவ இடத்திலேயே
உயிரிழந்த வேளையில் அவரின் மூத்த சகோதரியான நோரலிஸா
அப்துல்லா (வயது 42) நெஞ்சு, இடுப்பு மற்றும் காலில்
காயங்களுக்குள்ளனதாகக் கோத்தா ஸ்டார் மாவட்ட இடைக்கால போலீஸ்
தலைவர் சைட் பஸ்ரி அலி கூறினார்.
பள்ளி செல்லாத மற்றும் வேலையில்லாத அந்த 14 வயது காரோட்டி
மூக்கில் காயங்களுக்குள்ளானார் என்று அவர் தெரிவித்தார்.
அந்த இளம் பெண் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை
மையத் தடுப்பை மோதி எதிர்த்தடத்தில் நுழைந்து மோட்டார் சைக்கிளை
மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
ஜாலான் கோல கெடாவிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையம் எதிரே இந்த
விபத்து நிகழ்ந்தது. அந்த மோட்டார் சைக்கிள் தாமான் பெர்சத்து சாலை
சமிக்ஞை விளக்கிலிருந்து கோல கெடா நோக்கிச் சென்று கொண்டிருந்த
வேளையில் கார் எதிர்திசையில் வந்து கொண்டிருந்துது என்றார் அவர்.
விபத்தில் சிக்கிய கார் அந்த இளம் பெண்ணின் தாயாரின் நண்பருக்குச்
சொந்தமானது எனக் கூறிய அவர், வயது குறைந்தவர் காரை ஓட்டுவதற்கு
அனுமதியளித்ததற்காகக் காரின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று
அவர் மேலும் தெரிவித்தார்.








