ஷா ஆலம், அக் 23- மூத்த குடிமக்கள் உதவித் திட்டத்தின் கீழ் 142,958
முதியவர்களுக்குத் தலா 500 வெள்ளி வழங்கப்படுகிறது. கடந்த ஜூலை
மாதம் வரை இத்திட்டத்திற்கு 49 கோடியே 37 லட்சம் வெள்ளி
செலவிடப்பட்டுள்ளது.
தகுதி உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு
ஏதுவாக அவர்களுக்கு மாதம் 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவதை
இந்த மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை
துணையமைச்சர் அய்மான் அதிரா சாபு கூறினார்.
பொது உதவித் திட்டத்தின் கீழ் படுக்கையில் இருக்கும் மாற்றுத்
திறனாளிகள்/ கடும் நோய் காரணமாக படுக்கையில் இருப்போர் பராமரிப்பு
திட்டம் மூலம் சமூக நல இலாகா மாதம் 500 வெள்ளியை வழங்கி
வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று பாடாங் ரெங்காஸ் உறுப்பினர் அஸ்ஹாரி ஹசான்
எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் இவ்வாறு
கூறினார்.
மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மகளிர், குடும்ப
மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து அஸ்ஹாரி கேள்வியெழுப்பினார்.
மேற்கண்ட திட்டங்கள் தவிர, மூத்த குடிமக்கள் நடவடிக்கை மையம்,
வீட்டிலுள்ளவர்களுக்கான உதவிச் சேவைத் திட்டம் ஆகிய
திட்டங்களையும் முதியோரின் நலனுக்காக அரசு அமல்படுத்தி வருகிறது
என்று துணையமைச்சர் கூறினார்.
மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, ஆக்ககரமான மற்றும் பயன்மிக்க தரப்பினராக முதியோர் விளங்குவதை உறுதி செய்வதற்கும் இதுவரை நாடு முழுவதும் 161 மூத்த குடிமக்கள் நடவடிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.








