ஷா ஆலம், அக் 13- ரப்பர் உற்பத்தியை அதிகரிக்கும் மேம்பாட்டுத் திட்டத்தில் (ஜி.பி.பி.ஜி.) 8,492 ஹெக்டர் பரப்பளவில் இரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிலாங்கூரைச் சேர்ந்த 2,856 சிறுதோட்டக்காரர்கள் பங்கேற்பதை ரிஸ்டா எனப்படும் ரப்பர் சிறுதோட்டக்காரர்கள் மேம்பாட்டு வாரியம் உறுதி செய்யும்.
வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் சிறுதோட்டக்காரர்களின் மாத வருமானம் 4,500 வெள்ளியை எட்டுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஜி.பி.பி.ஜி. திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரிஸ்டாவின் உற்பத்தி மற்றும் சந்தைப் பிரிவின் இயக்குநர் நோர் அஸான் முகமது நோர் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பால் வெட்டுத் தொழில் மேற்கொள்ளப்படாத 533,000 ஹெக்டர் நிலங்களின் மூலம் 221,859 சிறுதோட்டக்காரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் கடந்த 2013ஆம் ஆண்டு ரிஸ்டா மேற்கொண்ட ஆய்வின்படி மாநிலம் முழுவதும் உள்ள 7,113 சிறுதோட்டக்காரர்களில் 40.15 விழுக்காட்டினர் அல்லது 2,856 பேர் ரப்பர் பால் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாநிலத்திலுள்ள 8,4892 ஹெக்டர் ரப்பர் தோட்டங்களில் பயன்படுத்தப்படாத தோட்டங்களின் அளவு 3,410 ஏக்கராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் ரிஸ்டாவின் 2023ஆம் ஆண்டிற்கான ஜி.பி.பி.ஜி. திட்டம் மற்றும் சிறந்த விவசாய நடைமுறை என்ற திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.








