கோம்பாக், செப்டம்பர் 22: வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT) நாட்டில் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதில் சிலாங்கூரை சாம்பியனாக அங்கீகரித்துள்ளது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 2018 முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் 40,000 மலிவு விலை வீடுகள் கட்டுவதில் மாநில அரசு வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 45,000 யூனிட்கள் முடிக்கப் படவுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 30,000 யூனிட் என்ற இலக்கை தாண்டி உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
"நாங்கள் இதுவரை சுமார் 70,000 முதல் 80,000 (விண்ணப்பங்கள்) அனுமதித்துள்ளோம். ஆனால் 2018 முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தோராயமாக 40,000 குடியிருப்புகள் பூர்த்தி செய்யப் பட்டுள்ளதாக KPKT தெரிவித்துள்ளது.
மேலும் 45,000 யூனிட்கள் முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். இந்த திட்டங்கள் அனைத்தையும், குறித்த நேரத்தில் கட்டி முடிப்பது நோக்கமாக கொண்டு இயங்குவதால் நாங்கள் அதனை முடிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு 29 அசல் குடியேறிகள் உட்பட 420 வாங்குபவர்களுக்கு சிலாங்கூர்கூ @ ஸ்ரீ தெமெங்குங் அடுக்குமாடி குடியிருப்பு சாவிகளை வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) உள்ளபடி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நகரத்தில் அல்லது புதிய வீடுகளில் வசதிகளை மாநில அரசு மேம்படுத்தும் என்றும் அமிருடின் மேலும் கூறினார்.
"ஷா ஆலம், அம்பாங், பெட்டாலிங் மற்றும் சிராஸ் போன்ற நகரங்களில் 80 மற்றும் 90 களில் உருவாக்கப்பட்ட பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன, அவை புத்துயிர் பெற வேண்டும்.
“கூட்டாட்சி மட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை. அதிக வசதிகளுடன் கூடிய அதிக போட்டித்தன்மை கொண்ட வீட்டு வசதிகளை உருவாக்க இது சிறந்த வாய்ப்பாகும்," என்றார்.








