ஷா ஆலம், செப் 10- ஜூவாலான் ஏசான் ரஹ்மா விற்பனையில் கலந்து கொள்வோருக்கு அரிசியை விநியோகிப்பதில் தாங்கள் பிரச்சனை எதனையும் எதிர்நோக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.
அனைத்து மலிவு விற்பனைகளின் போதும் ஏசான் முத்திரை கொண்ட 5 கிலோ எடை கொண்ட 200 பாக்கெட் அரிசியை தாங்கள் விற்பனைக்கு வைப்பதாக அதன் விற்பனைப் பிரிவு மேலாளரான முகமது ஃபாரிட் முஸ்தாபா தெரிவித்தார்.
இன்று இங்குள்ள செக்சன் 27, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற கோத்தா கெமுனிங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாங்கள் இதுவரை அரிசி பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை. அனைத்து மலிவு விற்பனைகளிலும் ஒரே அளவிலான அரிசியை விற்பனைக்கு வைக்கிறோம் என்றார் அவர்.
முன்பு அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை நிலவியது. எனினும், (போக்குவரத்து பிரச்சனை காரணமாக) தற்போது விற்பனை இடங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவுப் பொருளின் விநியோகத்தை ஈடு செய்ய முடிந்தது என்று அவர் மேலும் சொன்னார்.
மாநிலத்தில் அரிசி விநியோகம் போதுமான அளவில் உள்ளதாகவும் அதன் கையிருப்பு போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.
கடந்த மாத தொடக்கத்தில் அரிசிக்கான பற்றாக்குறை 10 முதல் 15 விழுக்காடு வரை இருந்ததாகவும் எனினும், சிகிஞ்சானிலிருந்து அரிசி தருவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வானிலை மாற்றம் காரணமாக அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுவதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








