கோலாலம்பூர், ஆக 27- ஷா ஆலம், பண்டார் எல்மினாவில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான இருவரின் குடும்பத்தினர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமிருந்து நிதியுதவி பெற்றனர்.
தனது அரசியல் செயலாளரான அகமது ஃபர்ஹான் பவுசி, இவ்விபத்தில் பலியான பெந்தோங், கம்போங் கெத்தாரியைச் சேர்ந்த இட்ரிஸ் அப்துல் தாலிப் அலியாஸ் ரமாலியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கியதாக பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் பலியான பெலாங்கை சட்டமன்ற உறுப்பினரும் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருணின் சிறப்பு அதிகாரியாக இட்ரிஸ் பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த பேரிடரில் பலியான மற்றொரு நபரான கைரில் அஸ்வானின் குடும்பத்தினரை காராக், பெல்டா மெம்பேகா 1 இல் உள்ள அவர்களின் இல்லத்தில் அகமது ஃபர்ஹான் சந்தித்து தமது சார்பில் நிதியை ஒப்படைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து தாம் மிகவும் வருத்தமடைவதோடு இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த துயரமிகு சூழலிலிருந்து மீள்வதற்குரிய மனவுறுதியைப் பெற தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 17ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உள்பட பத்து பேர் மரணமடைந்தனர். விமானத்தில் பயணம் செய்த அறுவர் மற்றும் இரு விமானிகளோடு இவ்விபத்து நிகழ்ந்த போது சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரும் இச்சம்பவத்தில் பலியானவர்களில் அடங்குவர்.








