கோத்தா பாரு, ஆக 5- இம்மாதம் தொடங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து 640 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாதம் இரு முறை ரஹ்மா மலிவு விற்பனை நடைபெறும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அறிவித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அறிவித்ததைப் போல் கூடுதலாக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக அதன் துணைமையச்சர் பவுஸியா சாலே கூறினார்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத் தொகுதி நிலையில் மாதம் இரு முறையும் சட்டமன்றத் தொகுதி நிலையில் மாதம் ஒரு முறையும் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டு வந்தது என்று அவர் சொன்னார்.
தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ள நிலையில் சட்டமன்ற நிலையில் மாதம் இரு முறை ரஹ்மா மலிவு விற்பனையை நடத்துவதற்குரிய வாய்ப்பு நமக்கு கிட்டியுள்ளது என்றார் அவர்.
இந்த நடமாடும் வர்த்தக அணுகுமுறை அதாவது ஜூவாலான் ரஹ்மா பி40 தரப்பினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் மக்கள் குடியிருப்பு (பி.பி.ஆர்.) உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் பிரதமர் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்ததாக பவுஸியா தெரிவித்தார்.
நேற்று இங்கு கிளந்தான் மாநில நிலையிலான ரஹ்மா பெரு விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த இரண்டு நாள் விழாவில் சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு கிட்டுகிறது. இது தவிர மெனு ரஹ்மா திட்டத்தில் 100 வியாபாரிகளுக்கும் வர்த்தக வாய்ப்பு இங்கு வழங்கப்பட்டுள்ளது.








