மணிலா, மார்ச் 3- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, சபா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்கு ஏதுவாக போதுமான நிதியைத் தயார் செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு வெள்ள நிலவரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து துணைப் பிரதமரும் தேசியப் பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடியுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து புறப்படும் முன் தாம் பேசியதாக அன்வார் தெரிவித்தார்.
ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ள நிலவரம் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு போதுமான நிதியைத் தயார் செய்வது குறித்து துணைப் பிரதமருடன் விவாதித்தேன் என்று அவர் சொன்னார்.
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான இரு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புவதற்கு முன்னர் இங்கு மலேசிய பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளம் மற்றும் மண் அரிப்பு காரணமாக இடிந்து விழுந்த ரொம்பின், பெல்டா செலாஞ்சாரிலுள்ள பாலத்தை உடனடியாக மறுநிர்மாணிப்பு செய்யும்படியும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான இரு நாள் பயணம் குறித்து கருத்துரைத்த அவர், அந்த அண்டை நாட்டுடனான இரு வழி உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது என்றார்.








