புத்ரா ஜெயா, மார்ச் 1- காற்றழுத்த தாழ்வு நிலையின் விளைவாகத் தொடர்ச்சியான வடகிழக்கு பருவமழையின் ஆறாவது அத்தியாயத்தை மலேசியா தற்போது எதிர்நோக்கியுள்ளது.
இந்த ஆறாவது இறுதிக்கட்ட பருவ மழை கடுமையான மழையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.
வடமேற்கு பருவ நிலை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் வடகிழக்கு பருவமழை இம்மாத மத்தியில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராத வரை தற்போது நிலவுவதைப் போல் நாடு கடுமையான மழையை எதிர்கொள்வதற்குச் சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.
இது, கனமழையின் இறுதி அத்தியாயமாக இருக்கலாம் என்பது எங்களின் கணிப்பாகும். எனினும், வடகிழக்கு பருவ மழை இம்மாத மத்தியில் முடிவடைவதால் கன மழை பெய்வதற்குரிய சாத்தியம் உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது என்றார் அவர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது இடியுடன் கூடிய கனத்த மழை பெய்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
கடந்தாண்டு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இம்மாதம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







