ஷா ஆலம், பிப்.25: தனியார் பொது மருத்துவமனைகளில் வசதி குறைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக ஸ்கில் மடாணி மருத்துவத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கத்தால் செயல் படுத்தப்பட்ட மருத்துவத் திட்டம் அரசுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது. அரசாங்கத்தின் சுகாதார மையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கத்திற்காக RM120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்தப் போது, "பல்கலைக்கழக மருத்துவமனைகள், இராணுவ மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பிற மருத்துவமனைகளும் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் திறன் மேம்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், மலாக்கா மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க 476 படுக்கைகள் கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தொகுதியை நிர்மாணிக்க கிட்டத்தட்ட 700 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"பேராக், கோலா காங்சார், ஜெலுபு, நெகிரி செம்பிலான், ஜொகூர் மருத்துவமனைகள் உட்பட 26 மருத்துவமனைகளின் விரிவாக்க மேம்பாட்டுக்கான ஆரம்பப் பணிகளையும் அரசாங்கம் தொடங்கும் என்றார். இந்த மருத்துவமனைகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையானது," என்று அவர் குறிப்பிட்டார்.








