கோலாலம்பூர், பிப் 24- வசீகரிக்கக்கூடிய தரவுகளின் வாயிலாக மக்களை திசை திருப்பாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய அரசாங்கம் முடிவெடுத்ததாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“மடாணி“ எனப்படும் இந்த நாகரீக வரவு செலவுத் திட்டம் பொறுப்புணர்வு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் நிச்சயமற்ற உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட சவால்களை எதிர் கொள்ளும் விதத்திலும் அமைந்துள்ளது என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
நாடு கடந்த காலக் கடன்களைத் தொடர்ந்து சுமந்து வந்துள்ளது. நாட்டின் மொத்தக் கடன்
தொகை 1.2 ட்ரிலியன் வெள்ளியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ஆம்
ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடாகும்.
நாட்டின் கடன் மற்றும் அது சார்ந்த பொறுப்புகள் 1.5 ட்ரிலியன் வெள்ளியாக அதிகரிக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 81 விழுக்காடாக உயர்வு காணும். திரும்பச் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டித் தொகையும் 4,600 கோடி வெள்ளியாக அதாவது மொத்த வருமானத்தில் 16 விழுக்காடாக இருக்கும். இதுவரை அமல்படுத்தப்பட்டு வரும் 15 விழுக்காட்டை விட இது அதிகமாகும் என்று அவர்
தெரிவித்தார்.








