கோலாலம்பூர், பிப் 23- இணையம் வாயிலாக பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் செய்தித் தளங்கள் அல்லது செயலிகளில் உள்ள உள்ளடக்கங்ளை அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு ஏதுவாக அவற்றைத் தணிக்கை செய்ய அல்லது வகைப்படுத்த அரசாங்கம் திட்டமிடவில்லை.
விரைவாக தகவல்களை அனுப்பப் பயன்படும் வாட்ஸ்ஆப், வீசாட், மிசாட் மற்றும் பிற சமூக ஊடகச் செய்தித் தளங்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை அரசாங்கம் தற்போதைக்கு அமல்படுத்தாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
எனினும், ஏமாற்று நடவடிக்கைகள், பிறரின் அடையாளத்தைப் பயன்படுத்தி செயல்படுவது போன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் நடப்பிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அரசாங்கம் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று ஹராப்பான் உறுப்பினர் பி.பிரபாகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினர் மத்தியில் எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டு வரும் டெலிகிராம், வீசாட், மிசாட் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கும் முடிவை பரிசீலனைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என பிரபாகரன் கேள்வியெழுப்பியிருந்தார்.








