ஷா ஆலம், பிப் 21- பெண்டோரா பேப்பர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள நாட்டின் தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான விசாரணை துல்லியமான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
குற்றங்களுக்கான ஆதாரம் இருந்தால் ஊழல் தடுப்பு நிறுவனம், அரச மலேசியப் போலீஸ் படை, உள்நாட்டு வருமான வரி வாரியம் போன்ற அமலாக்கத் தரப்பினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
ஆகவேதான், இவ்விவகாரம் மீது துல்லியமான விசாரணையை மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
விசாரணைகள் மூடி மறைக்கப்படாது. வலுவான ஆதாரங்கள் இருந்தால் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.
பெண்டோரா பேப்பர் விவகாரம் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு, அதன் விசாரணை மற்றும் அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்து பாரிட் சூலோங் தேசிய முன்னணி உறுப்பினர் டாக்டர் நோராய்னி அகமது எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு சொன்னார்.








