ஷா ஆலம், பிப் 21- அரசு நிர்வாகம் சீராகச் செயல்படுவதை உறுதி செய்ய நாடாளுமன்ற நிலையில் ஐந்து செயற்குழுக்கள் உருவாக்குவதற்கு கோம்பாக் உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பரிந்துரைத்துள்ளார்.
துணை நிறுவனத் தேர்வுக் குழு, அரசு அமைப்புகள் தேர்வுக் குழு மற்றும் கூட்டரசு தேர்வுக் குழு ஆகியவையும் அவற்றில் அடங்கும் என அவர் சொன்னார்.
உதாரணத்திற்குக் கூட்டரசு சிறப்பு தேர்வுக் குழுவின் கீழ், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.8 விழுக்காட்டு பங்களிப்பைச் சிலாங்கூர் வழங்குகிறது. ஆயினும் அதில் 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே எங்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் நாட்டின் பங்காளிகள் என்ற முறையில் சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மக்களவையில் நேற்று மாட்சிமை தங்கிய பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
இவ்விரு பரிந்துரைகள் தவிர்த்து பொது போக்குவரத்து செயற்குழு, சமூக நகர்வு செயற்குழு, சமூகச் செயல் குழு ஆகியவை தாம் பரிந்துரைத்துள்ள இதர மூன்று குழுக்களாகும் என அவர் சொன்னார்.
இந்த ஐந்து செயற்குழுக்களை அமைப்பதன் வாயிலாக நாடாளுமன்ற நிர்வாகத்தைப் பலப்படுத்த இயலும் என்பதோடு அரசு நிர்வாகத்தின் செயலாக்கமும் சீராக இருக்கும் என்றார் அவர்.








