கோலாலம்பூர், பிப் 15- மலேசியா கடல்சார் அமலாக்க நிறுவனம் கடந்தாண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகளை மலேசியக் கடல் எல்லையில் மேற்கொண்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது அனைத்து விதமான கப்பல்களும் மீன்பிடிப் படகுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கைவசம் உள்ள தளவாடங்களைக் கொண்டு இந்த சோதனை நடவடிக்கையைக் கடல்சார் அமலாக்க நிறுவனம் மேற்கொண்ட போதிலும் அதன் அடைவு நிலை பிரமிக்கத்தக்க வகையில் இருந்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
எனினும், ராடார் முறையைப் பயன்படுத்துவது உள்பட தளவாட ரீதியில் ஆற்றலை மேம்படுத்துவதற்குக் குறுகியக் கால, மத்தியக் கால மற்று ம் நீண்டக் காலத் திட்டங்களை அது கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கடல் சார் அமலாக்கத் துறை தற்போது கடல் மற்றும் ஆகாய மார்க்க சோதனைகளுக்கான தளவாடங்களைக் கொண்டிருக்கிறது. ராடார் தேவையைப் பொறுத்த வரை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் செய்யப்பட்டு விட்டன. இருந்த போதிலும் வெற்றி
காணவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து விண்ணப்பம் செய்வோம்
என்றார் அவர்.
கிழக்கு கரைப் பகுதியில் இன்னும் ராடார் சேவை இல்லை. கடல் எல்லைப் பகுதியை முழுமையாகக் கண்காணிக்க ராடார் முறை மிகவும் முக்கியமானதாகவும். அது இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டு விட்டது. நிதியமைச்சின் அங்கீகாரத்தைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர்
தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பாயா பெசார் தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ முகமது சஹார் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.








