சிப்பாங், பிப் 15- இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சிரியாவின் உண்மை கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் அந்நாட்டிற்கு எத்தகைய மனிதாபிமான உதவிகளை வழங்குவது என்பதை கண்டறிவதற்கும் 21 பேர் கொண்ட சிறப்பு ஆய்வுக்குழுவினர் அந்நாட்டிற்கு நேற்று பயணமாகினர்.
சிரியாவுக்கு அடுத்தக் கட்ட உதவித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏதுவாக கள நிலவர அறிக்கையை வெளியுறவு அமைச்சின் இருவழி உறவுப் பிரிவின் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ நோர்மான் முகமது தலைமையிலான குழுவினர் விரைந்து அனுப்புவர் என்று வெளியறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் கூறினார்.
சிரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டிற்குள் நுழைவதில் நமக்கு சிரமம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அத்தடை மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விரைவாக அந்நாட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாட்டை நாம் செய்தோம். இதன் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விவாதித்த போது இன்றிரவே (நேற்றிரவு) ஆய்வுக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டினைச் செய்யும்படி உத்தரவிட்டார் என ஜம்ரி தெரிவித்தார்.
இந்த போராளர் குழுவில் வெளியுறவு அமைச்சு, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), அரச மலேசிய ஆயுதப்படை, சுகாதார அமைச்சு, செம்பிறைச் சங்கம் மற்றும் மெர்சி மலேசியா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.








