கோலாலம்பூர், பிப் 14- மலேசிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தின் (மிடா) மேற்பார்வையில் கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 39,290 கோடி வெள்ளி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அந்த முதலீடுகளில் 76.5 விழுக்காடு அல்லது 30,050 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகள் வெற்றிகரமாக அமலாக்கம் கண்டதாக அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் துறை துணையமைச்சர் லியு சின் தோங் கூறினார்.
கடந்த 2018இல் 57.6 விழுக்காட்டு முதலீடுகளும் 2019இல் 75.6 விழுக்காட்டு முதலீடுகளும் 2020இல் 62.2 விழுக்காட்டு முதலீடுகளும் 2021இல் 87 விழுக்காட்டு முதலீடுகளும் அமலாக்கம் கண்டன என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று தித்தி வங்சா தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த 2018 முதல் 2022 வரை மீடா அங்கீகரித்த தொழிலியல் மற்றும் சேவைத் துறை சார்ந்த முதலீடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் அமலாக்கம் கண்ட முதலீடுகள் குறித்து அவர் கேள்வியெழுப்பிருந்தார்.
கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட நேரடி அந்நிய முதலீடுகள் தொடர்பான தகவல்கள் இம்மாத இறுதியில் தயாராகும் என்று லியு சொன்னார்.
வழக்கமாக ஒரு திட்டம் அமலாக்கம் காண்பதற்குத் திட்டத்தின் அளவு மற்றும் நடப்பு பொருளாதார நிலையைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.








