கோலாலம்பூர், பிப் 14- சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை
மீறியதற்காகப் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் உள்ள மொத்தம் 197 உள்ளடக்கங்கள் கடந்த ஜனவரி மாதத்தில் நீக்கப்பட்டதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 101 உள்ளடக்கங்கள் டிக்டோக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாகத் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
தவறான உள்ளடக்கங்களை நீக்குவதற்குச் சமூக ஊடகத் தள சேவை வழங்குநர்கள் மூன்று முறைகளைப் பயன்படுத்துகின்றனர். முதலாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூக வழிகாட்டுதல்கள் மீறப்படுவதைத் தானாகக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட உள்ளக்கத்தை நீக்கி விடும்.
இரண்டாவதாகச், சமூக ஊடகப் பயனர்கள் செய்யும் புகார்கள் மூலமாகவும் மூன்றாவதாக அமலாக்கதத் தரப்பினர் அல்லது நிறுவனங்களின் வேண்டுகோளின் படியும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் நீக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
இதுவரை நடவடிக்கை அமைச்சு எந்தவொரு சமூக ஊடகப் பயனர் கணக்கையும் மூடவோ அல்லது தடுக்கவோ இல்லை. மாறாக பதிவேற்றிய உள்ளடக்கத்தை மட்டுமே அகற்ற வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது என்று மக்களவையில் இன்று வாய்மொழியாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பதிவேற்றும்
பயனர்களைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து வங்சா மாஜூ தொகுதி ஹராப்பான் உறப்பினர் ஜாஹிர் ஹாசன் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இந்த பதிலை வழங்கினார்.








